Revival - God's call - Article by Vijaykumar ( Vijay)
அங்கே எரியும் அக்கினி என்ன?
எகிப்திய காளவாயில் அடிமைகள் அபயமிடும் போதெல்லாம்
அங்கே எரியும் அக்கினி என்ன?
எகிப்திய காளவாயில் அடிமைகள் அபயமிடும் போதெல்லாம்
ஆண்டவருடைய ஓரேப்புகளின் முட்செடிகள் அனல்பற்றி எரியுமாம்!
இதோ! இந்தமுறை அழைப்பு உனக்குத்தான்...
வளையாத பாபிலோனிய பார்வோன்களை வளைக்கும்
வலுவான வேலையிருக்காம்!
வரலாறுகளை வரைந்த வலுக்கரங்களூக்கு
சொந்தக்காரர் "போ" என அனுப்புகிறார்!
இந்தப் படபடக்கும் அக்கினி இன்னும் என்ன சொல்லுகிறது?…
"இவ்வுலகில் காருக்கும், தேருக்கும், சீருக்கும், பேருக்கும்
பின்னால் போகிறவர்கள் தன்வழியே போகட்டும்…
இயேசுவின் அடிமை நீ தனிவழியே போ!
உயர்வு உயர்வு என அலைகிறவர்கள்
மேடுகளைத் தேடிப் போகட்டும்
உன்னதரின் சீடன் நீ ஆடுகளைத் தேடிப்போ!
கோடீசுவரக் குதிரைகள் தம் குருமார்களை
கோபுரங்களில் குடிவைத்துக் கொள்ளட்டும்
கோவேறுக் கழுதை நீ,
கோமகனை சேரிகளுக்குள்ளே சுமந்து போ!
பணந்தின்னிக் கழுகுகள் பல - திரு
மண்டலங்களைக் கட்டி ஆளட்டும்
கேரீத்தின் காகம் நீ,
பசித்த பாலகரின் வயிறுகளை போஷிக்கப்போ!
நசல்கொண்ட ஆட்டைக் கண்டு
நரிசேயர்கள் விலகிப் போகட்டும்
நல்ல சமாரியன் சந்ததி நீ - காயம் கட்ட
புசல் போல விரைந்து போ!
ஆராதனை வீரர்கள் தங்கள்
ஆல்ப வியாபாரங்களில் திளைக்கட்டும்
ஆபேலின் வம்சம் நீ,
இரத்த சாட்சிபலியாகப் புறப்பட்டுப் போ!
திருப்பணி வழியாக திரவியங்கள் தேடுவோர்
திரைகடல்கள் மீதிலே திசைகெட்டு ஓடட்டும் - நாசரேத்தூர்
தச்சன் கட்டிய படகு நீ
திக்கற்றவன் திரிந்தலையும் திசைகளைத் தேடிப்போ!
அரியாசனங்கள் பட்டத்தோடு அழைக்கையில் 'ச்சீ'யென உதறித்தள்ளு
ஆண்டவர் திட்டத்தோடு அனுப்பும்போதோ ஆபிரகாம்போல கிளம்பிவிடு!
தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்கள் தேடிவந்தாலும் புறக்கணி!
தேற்றுவாரற்ற விதவைகளின் துளி கண்ணீரையும் புறக்கணிக்காதே!
சிகரந்தொட்ட ஆத்துமாக்களின் புகழ்ச்சிகளுக்கு கணக்கு வைக்காதே!
சிறுமைப்பட்ட ஆத்துமாக்களின் விசும்பலைக்கூட கணக்கில் வை!"
இனி மறுபேச்சு ஏது ஆண்டவரே!
திக்கெட்டையும் படைத்த தானைத் தலைவன் துணையிருக்க - இனி
திக்குவாய்களுக்காக தயக்கம் இல்லை - இந்தமுறை சாட்சிக்கு
கோலும் வேண்டாம், குஷ்டமும் வேண்டாம்,
பாம்பும் வேண்டாம், படையும் வேண்டாம் ஆண்டவரே!
"போ" என்ற உம் வார்த்தை மாத்திரமே போதும்…