வேறொரு இயேசுவும் அவனது ஊழியமும்
எழுதியவர் : சகரியா பூணன்
“நீங்கள் எளிதில் ஏமாறக் கூடியவர்களாகக் காணப்படுகிறீர்களே: யார் எதைச் சொன்னாலும் விசுவாசித்து விடுகிறீர்கள்; நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவை ஒருவன் பிரசங்கித்தாலும் விசுவாசித்துவிடுகிறீர்கள்” (2 கொரி 11:4 – Living Bible).
இப்போது, நீங்கள் சுமார் 2000 -வருடங்களுக்கு முன்பாக இருந்த பாலஸ்தீனா நாட்டில் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்! அங்கே, வியாதியஸ்தர்களை சுகமாக்கும் "நசரேயனாகிய இயேசு" எனப்படுபவரின் ஊழியத்தைக் குறித்து கேள்விப்படுகிறீர்கள். இதுவரை நீங்கள் அவரைப் பார்க்காதபடியால், அந்த ‘இயேசு’ எனப்பட்ட பிரசங்கியை வைத்து எருசலேமில் நடக்கும் ஓர் சுகமளிக்கும் கூட்டத்திற்கு ஓடோடிச் சென்று... அங்கு கூடியிருந்த திரளான ஜனத்தைக் கண்டதும் அதிக மகிழ்ச்சியடைகிறீர்கள்!
கூட்டத்தில் நுழைந்து முண்டியடித்து நெருங்கிச் சென்றதும் மேடையில் ‘இயேசுவோடு’ (பிரசங்கியார்) சேர்ந்து பிலாத்து, ஏரோது, அன்னா, காய்பா ஆகியோர் கண்ணைக் கவரும் அலங்கார ஆசனத்தில் உட்கார்ந்திருக்கும் காட்சியைக் காண்கிறீர்கள்!
அப்போது, ‘இயேசு’ எழுந்துவந்து ஜனங்களை நோக்கி, "அன்பானவர்களே, இன்று நாம் அனைவருமே எவ்வளவு அதிகமாக கௌரவிக்கப்பட்டிருக்கிறோம் பார்த்தீர்களா? ஏனென்றால், பாலஸ்தீனா அரசின் இருபெரும் அதிபதிகள் இன்று நம்மோடு இருக்கிறார்கள்! ஆம், மாண்புமிகு ஏரோதும், மாண்புமிகு பிலாத்தும் தங்கள் பிரசன்னத்தால் இக்கூட்டத்தை கௌரவிக்கும்படி தயவாய் வருகை தந்திருக்கிறார்கள்!! அதுமட்டுமா, இரண்டு பிரசித்தி பெற்ற தேவமனிதர்களாகிய பேராயர் அருள்மிகு. ரெவரண்ட். அன்னாவும், அருள்திரு. காய்பாவும் சேர்ந்து வருகை தந்து இக்கூட்டத்தை ஆசீர்வதிக்கக் காத்திருக்கிறார்கள். இது நம் உள்ளத்தை நெகிழச்செய்யும் எத்தனை மகிழ்ச்சியாய் இருக்கிறது!" என்றார்.
இந்த அறிமுக உரையை ‘இயேசு’ நிகழ்த்திய பின்பு ஏரோதையும் பிலாத்துவையும் அழைத்து, கூட்டத்தை ஆரம்பித்து வைத்து ஒருசில வார்த்தைகள் பேசும்படி மிக பவ்வியமாய் குனிந்து கேட்டுக்கொண்டார். உடனே, மாண்புமிகு ஏரோதும், பிலாத்தும் ஒருவர்பின் ஒருவராக வந்து, ‘இயேசு’ தன் ஊழியத்தின் மூலமாக சமுதாயத்திற்கு ஆற்றிடும் எண்ணற்ற நன்மைகளைக் கூறி அவரை வாயாரப் புகழ்ந்தபின், "ஜனங்களே! உங்கள் யாவருடைய சீரிய ஆதரவையும் என்றும் இவருக்கு அளித்திடுங்கள்" எனக் கூறி முடித்து ஆசனத்தில் அமர்ந்தனர்.
மறுபடியும் ‘இயேசு’ எழுந்துவந்து அருள்திரு. அன்னாவையும், அருள்திரு. காய்பாவையும் சில வார்த்தைகள் பேசும்படி அழைத்து "ஆரம்ப ஜெபத்தை" ஜெபிக்கும்படி மிகுந்த பணிவோடு கேட்டுக்கொண்டார். உடனே, அவர்களும் முன்வந்து ‘இயேசுவை’ வானளாவ புகழ்ந்து, "ஜனங்களே, நீங்கள் யாவரும் ‘சபை பாகுபாடில்லாமல்’ எல்லா ஸ்தாபன மக்களும் ‘இந்த இயேசுவின்’ ஊழியத்திற்கு முழு ஆதரவையும், ஜெபத்தையும் அளித்து ஒத்துழைக்க வேண்டும்" என வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.
பின்பு, ‘இயேசு’ தன் ஊழியத்தின் பொருளாதாரத் தேவைகளைக் குறித்துப் பேசும்படி திரு. யூதாஸ்காரியோத்தை பாசத்தோடு அழைத்தார். யூதாஸும் எழுந்துவந்து, " எனக்கு அன்பானவர்களே, இந்த ஊழியத்தின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்ய இன்னமும் பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் தேவைப்படுகிறது" என மிகுந்த ஏக்கத்துடன் கூறினார். யூதாஸ் தொடர்ந்து பேசுகையில், "நீங்கள் யாரெல்லாம்1000 தினார்களுக்கு (ரூபாய்கள்) மேல் காணிக்கை தருகிறீர்களோ அவர்கள் பூர்த்தி செய்யும்படியான படிவங்கள் என்னிடமும், ஆங்காங்கே நிற்கும் எங்கள் உதவியாளர்களிடமும் இருக்கின்றன. இவ்வாறு காணிக்கை செலுத்தி படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கும் ஜனங்களுக்காக ஓர் நற்செய்தி காத்திருக்கிறது! ஆம், அவர்களுக்காக ‘இயேசு’ விசேஷ பிரார்த்தனை ஏறெடுக்கப்போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்!" மேலும், "பணம் கொடுக்கும் நீங்கள் விசுவாசியா அல்லது அவிசுவாசியா என்பதைக் குறித்தெல்லாம் கவலைக் கொள்ளவே வேண்டாம். நீங்கள் யாராயிருந்தாலும் பரவாயில்லை. இக்கூட்டத்திற்கு பெரிய பெரிய பணக்காரர்கள் வந்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது! நீங்கள் யாவரும் ‘இயேசுவின்’ ஊழியத்திற்கு வாரி வழங்குவதற்கு அழைக்கப்படுகிறீர்கள்" என கூறி முடித்தார்.
உடனே, மாண்புமிகு ஏரோது எழுந்துவந்து, ‘இயேசுவின்’ ஊழியத்திற்கு இலட்சகணக்கில் காணிக்கை கொடுப்போர் அனைவருக்கும் "வரிவிலக்கு" சலுகை அளிக்கப்படும் என அறிவித்தார்! அதையடுத்து காணிக்கை வசூல் இனியபாடல் இசையோடு மும்முரமாய் நடந்து முடிந்தது!
இப்போது, ‘இயேசு’ முன்வந்து கூடியிருந்த ஜனங்கள் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருக்க ‘சுருக்கமாய்’ ஓர் செய்தியைக் கொடுத்தார். பின்பு தன் வசமிருந்த அற்புத வல்லமையை அவிழ்த்துவிட்டு ஒரு சில வியாதியஸ்தர்களையும் சுகமாக்கினார். பேதையான ‘ஏராளமான’ ஜனங்கள் அதைக் கண்டு வாய் பிளக்க அதிசயித்து நின்றார்கள்! அப்பாவி ஜனங்களோ அவரைப் பார்க்கும்படி முண்டியடித்து விரைந்து முன்வந்தார்கள். ஆனால், அதற்குள்ளாக, ‘இயேசு’ அதிவேகமாய் ஏரோதோடும், பிலாத்தோடும், அன்னா, காய்பாவோடும், யூதாஸ்காரியோத்தோடும்... அவ்வளவுதானா? இல்லை, ‘பண முடிச்சோடும்’ படோடோபமான அவர்களின் ரோமானிய ரதத்தில் பாய்ந்து ஏறிச்சென்றார்! எங்கே? எருசலேமின் தலைமையகத்திலுள்ள ஆர்ச் பிஷப்பின் அரண்மனைக்கு! அவரளிக்கும் விசேஷ கொரவ விருந்தில் கலந்துக்கொள்ளவே!!
இக்காட்சியையெல்லாம் கண்டு ஓய்ந்தப்பின்பு, நீங்கள் இப்போதுதான் புதிதாக மனந்திரும்பி கொஞ்ச அனுபவத்தையும், குறைந்த அளவு புரிந்துக்கொள்ளும் தன்மையுடையவராயிருந்தாலுமேகூட.. .. சற்றே தடுமாறி பேதலித்து நிற்கிறீர்கள்! நீங்கள் கண்ட காட்சி, அப்போஸ்தலனாகிய மத்தேயு, பேதுரு மற்றும் யோவான் கூறக் கேட்ட இயேசுவைப்பற்றிய காரியத்திற்கு முற்றிலும் முரணாக இருக்கிறதே என திகைத்து நிற்கிறீர்கள்!! இந்த நேரத்தில்தான் சாத்தான் உங்களை நெருங்கிவந்து, "மற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்க்காதிருங்கள் (மத்தேயு 7:1) என எழுதியிருக்கிறதே உனக்குத் தெரியாதா? சும்மா கண்டும் காணதவனாய் போய்விடு!" என காதில் முணுமுணுக்கிறான்.
நீங்களோ சுதாரித்துக்கொண்டு "உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவியையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள் (1 யோவான் 4:1) என்றும் எழுதியிருக்கிறதே!" என அவனுக்குப் பதிலடி கொடுத்து அவனைத் துரத்திவிட்டீர்கள்!!
இறுதியில் நீங்கள் ஓர் தீர்க்கமான முடிவிற்கு வந்து விட்டீர்கள்! ஆம், "நான் கேள்விப்பட்ட இயேசு இவர் அல்லவே அல்ல! இவர் நிச்சயமாகவே "வேறொரு இயேசுதான்!! (2 கொரி 11:4)".
உங்கள் முடிவு சரியே! அவர் "வேறெரு இயேசுவேதான்". எப்படி இந்த முடிவிற்கு வந்தீர்கள்? உங்களுக்குள் நீங்கள் பெற்ற அபிஷேகமே கீழ்காணும் உண்மைகளை உங்களுக்குப் போதித்தது (1 யோ 2:19,20,27).
1. உண்மையான இயேசு:
தன் ஊழியத்தைக் கௌரவிக்கும்படி அரசு அதிபதிகளையோ அல்லது ஆதரவைத் திரட்டும்படி மனந்திரும்பாத மார்க்கத் தலைவர்களையோ நாடிப் பின்செல்லவே மாட்டார்! அவர்களில் ஒருவரையும் ஒருக்காலும் முகஸ்துதி செய்யவும் மாட்டார். ஓர் சமயம் இயேசுவிடம் ‘பிஷப்’ ஒருவர் வந்தார். அவரிடம் இயேசு, "நீ மனந்திரும்ப வேண்டும்" என தயங்காது உரைத்தார் ( யோவான் 3:1-10) . ஏரோது ராஜாவை ‘ஓர் நரி" என்றே ( லூக்கா 13:31,32) இயேசு அழைத்தார். அவனை நேரடியாக சந்தித்த தருணத்தில் அவனோடு பேசுவதற்கும் மறுத்து நின்றார்!! ( லூக்கா 23:8,9) .
2. உண்மையான இயேசு:
எந்த மனுஷனிடமும் ‘பணத்தை’ தன் ஊழியத்திற்காக கூட ஒருபோதும் கேட்கவே மாட்டார்! தன் தேவைகளைத் தன் பிதா ஒருவர் மாத்திரமே அறிந்திருக்கும்படிச் செய்தார். எனவே, பிதாவானவரும் இயேசுவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மனுஷர்கள் மூலமாகவோ அல்லது ஒரு சமயம் நடந்ததுப்போல ஓர் மீனின் மூலமாகவோ கூட அதிசயமாய் கிரியை செய்தார் (லூக் 8:1-3; மத் 17:27) .
3. உண்மையான இயேசு:
தன் ஜெபங்களை எந்த விலைக்கும் ஒருக்காலும் "விற்பனை" செய்யவேமாட்டார்! ஓர் சமயம் சீமோன் என்ற சமாரியா நாட்டு மாயவித்தைக்காரன் இப்படித்தான் பேதுருவின் ஜெபத்தைத் பணத்தைக் கொண்டு தனக்கென பெறும்படி வந்தான். ஆனால், தேவனின் வரத்தை பணத்தினால் சம்பாதித்துவிடலாம் ( அப் 8:18-23) என எண்ணிக்கொண்ட அவனின் துர்க்குணத்தை பேதுரு கடுமையாக கடிந்துக்கொண்டான். அந்த சீமோன் அன்று உடனே மனந்திரும்பிவிட்டான்! ஆனால், அவன் வழியில் மனந்திரும்பாமலே பின்பற்றும் திரளானோர் பல நூற்றாண்டுகள் தொடங்கி இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். சீமோனைக் கடிந்துக்கொண்ட அந்த பேதுருவின் வம்சவழி வந்தோமென கூறிக்கொள்ளும் ரோமன் கத்தோலிக்க குருமார்கள் அக்காலம் தொடங்கி இன்னமும் தங்கள் ஜெபங்களை விற்பனை செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!!
மார்ட்டின் லூத்தர் தன்னுடைய நாட்களில், இத் "துர்குணத்திற்கு" கடுமையாய் எதிர்த்து நின்றார். ஆனால், இன்றோ, லூத்தர் வழிவந்தோமெனக் கூறிக்கொள்ளும் புராட்டஸ்ட்டெண்டுகளில் சிலர் தங்கள் "ஜெபங்களையும்" "தீர்க்கதரிசனங்களையும்" பணத்திற்கு விற்பனை செய்துக்கொண்டு மறுபடியுமாய்ப் பின்வாங்கி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். ஐயோ! சீமோனைப் போலவே இன்றும் அநேகர் ‘இவர்களுக்கு’ பணம் தரும்படி காத்திருக்கிறார்களே!! ஆ இது கொடுமை.
கடைசி நாட்களில், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களும் (குறிப்பாக, அடையாள அற்புதங்கள் மூலம்) வஞ்சிக்கப்பட்டு போகும்படியாக தந்திரமான கொடிய வஞ்சகம் உண்டாகுமென ( மத் 24:24) இயேசு அதிகமாய் வலியுறுத்தி எச்சரித்தார். இன்று, தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் ஜாக்கிரதையாக இருந்து ‘அதிக கவனமாய்’ சோதித்து பார்க்கவேண்டிய ஓர் ஊழியம் இருக்குமென்றால் அது "அடையாள- அற்புதங்கள்" நிறைந்த ஊழியங்களேயாகும். யாராகிலும், இயேசு தன்னோடு பேசும்படி தங்கள் அறைக்குள் வந்தார் எனக் கூறினால் அதை ‘நம்பாதிருங்கள்’ என்றே இயேசு கூறினார் ( மத் 24:26) . இயேசு பரத்திற்கு ஏறிச்சென்ற நாள் தொடங்கி சுமார் ஈராயிரம் வருடங்கள் தொட்டு, அவரது உயித்தெழுந்த சரீரம் பிதாவின் வலதுபாரிசத்தைவிட்டு ஒருபோதும் இறங்கி வரவேயில்லை! பவுலும், ஸ்தேவானும் அந்த உன்னத ஸ்தானத்திலேயேதான் அவரைக் கண்டனர்! (அப் 7:56; 9:3).
யோவான் அப்போஸ்தலன் கூட, பத்மு தீவில் இயேசுவின் சரீரத்தைப் பார்க்காமல் அவருக்கு ஒப்பனையாய் இருந்த அடையாளங்களையே (symbols) கண்டான் ( வெளி 1:13:-16) . பரலோகத்தைவிட்டு இனி இயேசு வருவாரென்றால், அது அவர் இப்பூமிக்கு வரப்போகும் அவரது ‘இரண்டாம் வருகை’ மாத்திரமேயாகும். எனவே, இன்று என் வீட்டின் அறைக்குள் இயேசு வந்தாரென யாராகிலும் சொன்னால், ‘அவர்களை நம்பாதிருங்கள்’!!
மிக எளிதாய் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய விசுவாசிகளின் மத்தியில் ஜீவிக்கும் நாம், எதையும் ‘சோதித்துப்பகுத்தறியாதவர்களாய் ’ இருக்கவே கூடாது! இருப்பினும், இக்கடைசி நாட்களில், தேவவசனத்தை வாஞ்சித்து நேசிக்கும் அனைவருக்கும் அவரது வசனம் சுடர்விட்டு மிளிரும் காவல் விளக்காய் பிரகாசிக்கின்றதே!! நாம் அந்த வழிக்காட்டும் ‘ஒளியை’ மாத்திரமே பின்பற்றினால் ஒருக்காலும் வஞ்சிக்கப்படவே மாட்டோம்!
கேட்பதற்கு காதுள்ளவன் எவனோ அவன் கேட்கக்கடவன்!!