Sunday, August 16, 2020

Bro.R.Stanley 2020 August 15 - India Independence Day Prayer

 விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவராகிய கடவுளே,


ஒரே மனிதனிலிருந்து உலகத்திலுள்ள அத்தனை இனத்தாரையும்

மொழியினரையும் தோன்றச் செய்தவரே,

அளவிடமுடியாத உமது ஞானத்திற்காய்

உம்மைப் போற்றிப் புகழுகிறோம்.


இந்திய நாட்டில் எங்களைப் பிறக்கச் செய்த

உமது நோக்கத்திற்காய் நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.


படைப்பின் தேவனே,

எங்கள் நாட்டின் பல்வேறு மொழிகளுக்காக, கலாச்சாரங்களுக்காக,

மக்களினங்களுக்காக உம்மைத் துதிக்கிறோம். 


நாட்டின் மண்வளம், நீர்வளம் மற்றும் தாதுவளத்திற்காய் உமக்கு நன்றிசொல்லுகிறோம்.


பிறநாட்டவரின் அடிமைத்தனத்திலிருந்து எங்களை விடுவித்து

எங்களுக்குச் சுதந்திரம் கொடுத்ததற்காய் உம்மைப் போற்றுகிறோம்.


இதற்காய் உழைத்த, உயிர்கொடுத்த அத்தனைபேருக்காகவும்,

ஆண்டவரே, உம்மைத் துதிக்கிறோம்.


சேனைகளின் கர்த்தரே, எங்களை ஆளும் தலைவர்களுக்காய் உம்மை வேண்டுகிறோம்.


 அவர்கள் ஒவ்வொருவரும் தன்னலமின்றித் தியாகவுணர்வுடனும்,

பாரபட்சமின்றி அர்ப்பணிப்புடனும், ஊழலின்றி உண்மையுடனும்

செயல்பட அவர்களை உமது கரத்திற்குள் வைத்துக்கொள்ளும்.


நாட்டின் சமாதானத்தைக் குலைக்கும் தீய சக்திகள் ஒழிந்துபோவதாக.


மக்கள் யாவரும் நாட்டின் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து,

ஒருவரையொருவர் மதித்து நடக்க உதவிசெய்யும்.


செல்வந்தர்கள் தங்கள் பணப்பைகளை ஏழை எளியவருக்குத்

தாராளமாய்த் திறந்துவிடும் பரந்த மனப்பான்மை

எங்கள் நாட்டில் உருவாகிப் பெருகட்டும்.


வானுலகைப் படைத்த பரனே,

எங்கள் நாட்டில் பஞ்சம் தாண்டவமாடாதபடி ஏற்ற காலத்தில்

நல்ல மழையை அனுப்பித் தாரும். 


தரித்திரர், தள்ளப்பட்டோர், திக்கற்றோர்,

அனாதைகள் இன்னும் இதுபோன்று சிறுமைப்பட்டவர்களுக்குத்

தொண்டாற்றும் நபர்களையும் நிறுவனங்களையும் சிறப்பாய் ஆசீர்வதியும்.


வசதி படைத்த நாடுகளிலிருந்து எங்கள் நாட்டிற்கு அனுப்பப்படும் உதவிகள்

அதிகாரிகளால் திருடப்படாதிருக்கும்படிச் செய்யும்.


அடிப்படை வசதிகள்கூட இல்லாது அவதியுறும் கோடிக்கணக்கான

இந்தியருக்காய் இரங்கும் தேவா.


உமது குமாரனின் பன்னிரு சீடரில் ஒருவராகிய தோமாவை

முதல் நூற்றாண்டிலேயே எங்கள் நாட்டிற்குள் அனுப்பிவைத்ததற்காய்

உம்மைத் துதித்துப் பாடுகிறோம்.


இந்தியத் திருச்சபை இயேசுவின் நற்செய்திப் பேராணையை

இந்தத் தலைமுறையிலேயே நிறைவேற்றி முடிக்கும்படி நாங்கள் யாவரும்

உறக்கம் தெளிய, உற்சாகம் கொள்ள எங்களைத் தட்டியெழுப்பும்.

ஆமென், ஆமென்!