"காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே............."
காத்திடுவார் கிருபையாலே............."
பாடல் உருவான கதை:
(Crying to the wailing wall has no use. Pray to the living Savior)
6.3.1951 அன்று நாகர்கோவிலின் மூலச்சல் கிராமத்தில் பிறந்தவர் ஜெயச்சந்திரன். 1969-ஆம் ஆண்டு ஆகஸ்டு 26-ம் நாள் நாசரேத்தின் மர்காஷியஸ் கல்லூரியின் நல்லொழுக்க வகுப்பில்,ஒழுங்கீனமாகக் கலாட்டா செய்து கொண்டிருந்த ஜெயச்சந்திரனை விஞ்ஞானப் பேராசிரியர் பி.ஞானதுரை ,தனியாக சந்தித்து இயேசுவின் தியாக அன்பைப் பகிர்ந்தார்.
நிச்சயம் தனக்கு தண்டனை தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்துப் பேராசிரியரின் அறைக்குச் சென்ற ஜெயச்சந்திரனுக்கு, பேராசிரியர் இயேசுவின் அன்பை பகிர்ந்தது ஆச்சரியமாக இருந்தது. இந்தச் செயலால் அவரை மகிழ்விக்க ஆண்டவரின் விருப்பப்படி தன்னை அர்ப்பணித்து சிறு ஜெபத்தை ஏறெடுத்த ஜெயச்சந்திரனை உற்று நோக்கிய ஆவியானவர்,அவரது உள்ளத்தில் கிரியை செய்ததால் ஜெபத்தின் முடிவில் உண்மையாகவே தன் உள்ளத்தைத் திறந்து கொடுத்தார்.
மனம் மாறிய ஜெயச்சந்திரன்,கல்லூரி விடுதிக்குப்பின் இருந்த உடைமரக்காட்டில் தனியே வேத வாசிப்பிலும்,ஜெபத்திலும்,நேரத்தைச் செலவிட ஆரம்பித்தார். நாளடைவில் அங்கே மாணவரின் ஜெப ஐக்கியம் உருவானது.
1973-ம் ஆண்டுவரை,அசெம்பிளி ஆப் காட் சபையில்,கல்லூரி ஸ்தானாபதிகள் இயக்கத்தில் இணைந்து ஊழியம் செய்தார்.பல வாலிபர் முகாம்களை வெற்றிகரமாக நடத்திய ஜெயச்சந்திரனை,1972-ம் ஆண்டு துவக்கத்தில்,முழுநேர ஊழியம் செய்ய ஆண்டவர் அழைத்தார். ஊழியத்திற்குப் பிறரை அனுப்புவதில் தீவிரம் காட்டிய ஜெயச்சந்திரன்,தான் போவதற்குத் தயங்கி நின்றார்.
இந்நிலையில்,1972-ம் ஆண்டு,ஜெயச்சந்திரன் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கினார்.அடிப்பட்டுக் காயம்பட்ட காலை வெட்டி எடுத்துவிட டாக்டர்கள் தீர்மானம் செய்ததால் திடுக்கிட்ட ஜெயச்சந்திரன் ஆண்டவரின் அற்புத சுகம் வேண்டி,தன்னை அவர் பணிக்கு முற்றிலும் அர்ப்பணம் செய்தார்,ஜெப எண்ணையைப் பூசி, ஜெபித்து, பூரண சுகம் பெற்றார்.
தனது முழுநேர ஊழிய அர்ப்பணத்தின்படி,ஜெயச்சந்திரன் 1973-ம் ஆண்டு,பெங்களூரிலுள்ள தென் ஆசிய வேதாகமக் கல்லூரியில் சேர்ந்தார்.தென்னிந்தியத் திருச்சபைப் போதகரான அவரது தந்தை திரு ஜஸ்டஸ்ராபிக்கும்,அவரது தாய் திருமதி.சுலோச்சனாவுக்கும்,தங்கள் மகன் பெந்தெகோஸ்தே அனுபவ வழியில் செல்வது விருப்பமில்லை. எனினும்,தேவனால் ஏவப்பட்டவர்களின் உதவியுடன் வேதாகமக் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார்.
அந்நாட்களில்,கல்லூரி விடுமுறை நாட்களைக் கழிக்க தனது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு வந்திருந்தபோது 6.4.1974 அன்று,ஜெயச்சந்திரன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் பின் சக்கர டயர் வெடித்து,எதிரே வந்துகொண்டிருந்த லாரியை நோக்கி,வண்டி அவரை இழுத்துச் சென்றது.ஆனால் கடைசி நேரத்தில் ஆண்டவரின் கிருபையால் உயிர் தப்பினார்.
உடனடியாக தன் கிராமமான மூலச்சல் சென்று,ஒரு சிறு குன்றின் மீது மண்டியிட்டு,ஆவியில் நிறைந்து,தன்னை அற்புதமாய்க் காத்த தேவனைப் போற்றி,ஜெயச்சந்திரன் நன்றி செலுத்தினார்.உள்ளம் நன்றிப் பெருக்கெடுத்தோட,அந்நிய பாஷையில் தேவனைத் துதிக்க, அன்றே, அந்நிலையிலேயே ”காக்கும் கரங்கள்” பாடலை ராகத்துடன் பெற்றுக்கொண்டார்.
படிப்பை முடித்து ஊழியத்தை துவங்கிய ஜெயச்சந்திரன் சந்தித்த கடினமான அனுபவங்கள் ஏராளாம்.
1979-ம் ஆண்டு,தனது அருமை மனைவி பிரேமாவும் முதல் குழந்தையும் மரணமடைந்த போதும்,ஆண்டவரின் கரத்தைப் பற்றிக்கொண்டே,அலைகளைக் கடந்த போதகர் ஜெயச்சந்திரன்,68 பாடல்களையும் ராகத்தையும் இயற்றி,6 ஒலிநாடாக்களையும் வெளியிட்டிருக்கிறார்.
இன்றும் தஞ்சை ”அசெம்பிளி ஆப் காட்” திருச்சபையின் மூத்த போதகராக,ஆண்டவருக்கு வல்லமை நிறைந்த ஊழியத்தைச் செய்து பாடல்களை இயற்றியுள்ளார்.
17.6.1981 அன்று மணம்புரிந்த இவரது அன்பு மனைவி டாக்டர் மனோரமாவும் (ராணி),ஒரே மகள் ஷலோமி பிரியாவும்,இவரது ஊழியத்தில் இணைந்து பாடல்களை இயற்றி,பாடி,தேவனை மகிமைப்படுத்தி வருகின்றனர்.இப்பாடல்,உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் உள்ளங்களில் இன்றும் நம்பிக்கையூட்டி,பெலப்படுத்தி வருகிறது.
காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்
நம்பிவா இயேசுவை நம்பிவா இயேசுவை
1. நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என் மேல் பறக்க
நேசருக்காய் ஜீவித்திடுவேன் — நம்பி
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என் மேல் பறக்க
நேசருக்காய் ஜீவித்திடுவேன் — நம்பி
2. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
கர்த்தர் உன்னைக் கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போலே எழும்பிடுவாய் — நம்பி
கர்த்தர் உன்னைக் கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போலே எழும்பிடுவாய் — நம்பி
3. அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டுமந்தை முதலற்றாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை — நம்பி
ஆட்டுமந்தை முதலற்றாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை — நம்பி