சகோ.எமில் அவர்களின் விசுவாசம் மிகப் பெரியது. காரணம் அவரின் பாரமுள்ள கண்ணீர் ஜெபம் அவருக்கு வெற்றியை கொடுத்தது.
சகோ.எமில் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட ஒரு சம்பவம் அவரின் ஆழமான விசுவாசத்தை ஊர் மக்களும் அவருடைய உறவினர்களும் நேரில் காண செய்தது.
சகோ.எமிலின் தகப்பனார் சாயர்புரத்தில் CSI சபை குருவானவராக பணியாற்றினார்.
சகோ.எமில் அவர்களின் சகோதரிகளில் ஒருவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு நிச்சயம் நடந்தது. திருமண நாளும் வந்தது. வீட்டில் கல்யாண பந்தல், திருமண அலங்காரம் யாவும் முடித்து திருமண நேரம் வந்தது.
மணமகள் அலங்கரிக்கப்பட்டு வந்து அமர்ந்திருக்கிறாள். மாப்பிள்ளை வர தாமதமாயிற்று. நேரம் கடந்தது. திருமணத்துக்கு வந்த உறவினர், நண்பர்கள் பொறுமையிழந்தனர்.
எமிலின் பெற்றோர் தவித்தனர். உடனே ஒரு ஆள் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று விசாரித்து வருகிறேன் எனக்கூறி ஒரு புல்லட் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக புறப்பட்டு சென்றார். மொபைல் போன் கண்டுபிடிக்காத காலம் அது.
புல்லட் வண்டியில் சென்றவர் அதே வேகத்தில் திரும்பி வந்தார்.
சொன்ன தகவல் என்னவென்றால் மாப்பிள்ளைக்கு மணப்பெண்ணை பிடிக்கவில்லை என்பதாகும்.
எல்லாருக்கும் தூக்கிவாரிப்போட்டது.
இது ஒரு சபை குருவானவர் வீட்டு கல்யாணம் -
நிச்சய சடங்கு நடந்தபோதே பெண் மாப்பிள்ளையை பார்த்தார், மாப்பிள்ளை பெண்ணை பார்த்தார். மனபூர்வ சம்மதம் அப்போதே தெரிவிக்கப்பட்டது.
ஆனால் திருமண நேரத்தில் பெண்ணை பிடிக்கவில்லை என்று கூறக்காரணம் என்ன?
கடைசி நேரத்தில் மாப்பிள்ளை மனது அல்லது மாப்பிள்ளையின் பெற்றோர் மனது வேறு ஒரு பெரிய இடத்து பெண்ணை ஏற்பாடு செய்யும் ஆசையில் மனம்மாறியதாக அறிந்தேன்.
திருமண வீடு - சாவு வீட்டைப்போல் மாறிவிட்டது.
சில நிமிடத்திலேயே திருமண வீடு துக்க வீடாக மாறிவிட்டது. குடும்பத்தினர் அவமானப்பட்டு தலைகுனிந்த நிலையில் நிலைகுலைந்துபோனார்கள். திருமணத்துக்கு வருகை தந்தவர்களுக்கு மாப்பிள்ளை தாலிகட்ட வர மறுத்துவிட்டார் என்ற செய்தி தீ போல் பரவ, அவர்கள் யாவரும் திரும்பிபோவதா - தொடர்ந்து அங்கேயே அமர்வதா என்ற குழப்பத்தில் அவர்கள் யாவரும் சகோ.எமில் குடும்பத்தினரின் முகத்தை பரிதாபமாக நோக்கினர்.
வந்தவர்கள் தோல்வியுடன் தங்கள் வீடுகளுக்கு திரும்ப ஆயத்தப்பட்ட நிலையில், சகோ.எமில் எழுந்து திருமணமேடையில் நின்று எல்லாரையும் பார்த்து எல்லாரும் தயவுசெய்து கவனியுங்கள்.
இந்த திருமணம் நின்றுபோனதைக் குறித்து யாரும் கவலைப்படவேண்டாம். இந்த திருமணப்பந்தல் கலைக்கப்படாது. இன்னும் ஒரே வாரத்தில் இதே திருமண பந்தலில் என் அக்காவின் திருமணம் நடைபெறும். நிச்சயமாகவே நடைபெறும் நான் ஆராதிக்கும் தேவனின்மேல் உள்ள விசுவாசத்தில் சொல்கிறேன். ஏற்பட்ட தடைகளுக்காகவும் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காகவும் எங்களை மன்னியுங்கள் என்று கூறி, இன்னும் சில நாளில் புது மணமகன் யார் என்ற விவரம் உங்கள் வீட்டுக்கு அறிவிப்போம்.
தயவுசெய்து எல்லாரும் அக்காள் திருமணத்துக்கு தயக்கம் காட்டாது மறுபடியும் ஒருமுறை கட்டயமாக வந்துசேருங்கள் என்று கூறி ஜெபித்தார்.
திருமணத்துக்கு வந்த கூட்டம் கலைந்தது. எமில் கூறியபடியே ஒரே வாரத்தில் ஒரு டாக்டரின் குடும்பத்தில் பிறந்த ஒரு நபரை தன் அக்காவுக்கு மணமகனாக தெரிந்தெடுத்து அதே பந்தலில் வெகுவிமர்சையாக அந்த திருமணத்தை நடத்திவைத்தார்.
ஊரே அவரின் விசுவாசத்தையும், விசுவாசத்திற்கு கிடைத்த பதிலையும் கண்டு இப்போதும் அதை விவரித்து புகழ்வதை நான் கேட்டேன். சகோ.எமில் அவர்களின் விசுவாசம் மிகப் பெரியது. காரணம் அவரின் பாரமுள்ள கண்ணீர் ஜெபம் அவருக்கு வெற்றியை கொடுத்தது.
நன்றி: Dr.புஷ்பராஜ்