2025 ஆகஸ்ட் 15 - சுதந்திரதின ஜெபம்
பரமபிதாவே! இயேசுகிறிஸ்துவின் மூலம் எங்களை உமது பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டீரே உமக்கு நன்றி.
இந்திய நாட்டில் எங்களைப் பிறக்கச் செய்த உமது தூய நோக்கத்திற்காய் நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.
எங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்காக, மொழிகளுக்காக, கலாச்சாரங்களுக்காக, மக்களினங்களுக்காக உம்மைத் துதிக்கிறோம்.
நாட்டின் மலைகளுக்காக, நீண்ட கடற்கரைக்காக , வறண்ட பாலைநிலம் , செழிப்பான டெல்டா நிலம், மண்வளம், நீர்வளம் மற்றும் தாதுவளத்திற்காய் உமக்கு நன்றிசொல்லுகிறோம்.
எம்மை அடிமைப்படுத்தின பிறநாட்டவரின் அடிமைத்தனத்திலிருந்து எங்களை விடுவித்து எங்களுக்குச் சுதந்திரம் கொடுத்ததற்காய் உம்மைப் போற்றுகிறோம். இந்த சுதந்திரம் பெற தங்கள் இன்னுயிரைக் கொடுத்த மகான்களுக்காக அத்தனைபேருக்காகவும், ஆண்டவரே, உம்மைத் துதிக்கிறோம்.
எங்கள் சுதந்திர இந்தியாவின் பிரதமமந்திரி மற்றும் தேசிய தலைவர்களுக்காய் உம்மை வேண்டுகிறோம்.
அவர்கள் ஒவ்வொருவரும் தன்னலமின்றித் தியாகவுணர்வுடனும், பாரபட்சமின்றி அர்ப்பணிப்புடனும், ஊழலின்றி உண்மையுடனும், கடமை உணர்வோடு தியாகமாய் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பாடுபட உதவும்.
எம் நாட்டின் சமாதானத்தைக் குலைக்கும் தீய சக்திகள், வன்முறைகள், கலவரங்கள் அகன்று போவதாக. நாட்டின் குடிமக்கள் அனைவரும் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து, ஒருவரையொருவர் மதித்து நடக்க உதவிசெய்யும்.
செல்வந்தர்கள் ஏழை எளியவர்களைச் சுரண்டல் பரந்த மனப்பான்மையோடு, உதவி அனைவருக்கும் நல்ல கல்வி மற்றும் மருத்துவ சேவைப் பெருகிட ஜெபிக்கிறோம் . எங்கள் நாட்டில் இளைஞர்கள் அனைவருக்கும் நல்ல வேலை கிடைக்கவேண்டும் . வளம் பெருகட்டும்.
வானுலகைப் படைத்த பரனே, எங்கள் நாட்டில் பஞ்சம் தாண்டவமாடாதபடி ஏற்ற காலத்தில் நல்ல மழையை அனுப்பித் தாரும்.
தரித்திரர், தள்ளப்பட்டோர், திக்கற்றோர், அனாதைகள் இன்னும் இதுபோன்று சிறுமைப்பட்டவர்களுக்குத் தொண்டாற்றும் நபர்களையும் நிறுவனங்களையும் சிறப்பாய் ஆசீர்வதியும்.
வசதி படைத்த நாடுகளிலிருந்தும் எங்கள் நாட்டிலிருந்தும் நலியவர்க்கு அனுப்பப்படும் உதவிகள் அதிகாரிகளால் திருடப்படாதிருக்கும்படிச் செய்யும்.
அடிப்படை வசதிகள்கூட இல்லாது அவதியுறும் கோடிக்கணக்கான இந்தியருக்காய் இரங்கும் தேவா.
உமது குமாரனின் பன்னிரு சீடரில் ஒருவராகிய தோமாவை முதல் நூற்றாண்டிலேயே எங்கள் நாட்டிற்குள் அனுப்பிவைத்ததற்காய் உம்மைத் துதிக்கிறோம்.
இந்தியத் திருச்சபை இயேசுவின் நற்செய்திப் பேராணையை இந்தத் தலைமுறையிலேயே நிறைவேற்றி முடிக்கும்படி நாங்கள் யாவரும் உறக்கம் தெளிய, உற்சாகம் கொள்ள எங்களைத் தட்டியெழுப்பும்.
ஆமென், ஆமென்!